Monday 30 October 2017

தீ தின்ற உயிர்: ஷஹி ஸாதிக்

By கவிதைமணி  |   Published on : 30th October 2017 05:40 PM  |   அ+அ அ-   |  
தீ தின்ற உயிர்!
-பொழிகின்ற கருமை
எல்லாம்
என் உயிர் கக்கிய
புகை தானோ?-
ஒரு
குச்சி விதைக்க,
மறு கணமே புகைத்தெழுந்த
குரோதம்!
முழுக்கக் கருகிப்
போன இருதயம்!
அன்று
போராடியே
நின்று போனது!
ஒரு துண்டு
நிறத் துணிக்கா
கருகிப் போனேன்?
கேவலம்!
சிம்மாசனம் ஒரு
பொம்மை ஏறத்தான்
சிதைத்துக்கொண்டேன்?
என்னை நானே!
ஒரு,
நரி கூச்சலிட
சிறுத்தை நான்
விவேகம் இழந்தேன்!
அவன்
ஸ்வாசிக்கின்ற எச்சில்
காற்றாகிவிட்ட மக்கள்!
சுவாஸம் கொடுத்தவன் நான்
கருமுகிலெனச் சொட்டும்...
பிரதிபிம்பங்கள் அகற்றப்பட
கண்ணாடிகள் உடைக்கப்படுவதாய்!
பிரேதமாகத் தான்
கெளரவிக்கப்பட்டேன்!
கொதித்தெழுந்த சாதியம் கூட
நீரூற்றாப் பரிதாபம்!
தனியனாய்ப் பற்றி எரியும் வரை
வேடிக்கை பார்த்த
தலைமுறை இது!
என்,
கொதிக்கின்ற இளமை
எண்ணை ஊற்றப்பட்டு
கொழுத்தப்பட்டது!
தேசியம் பேசியவர்கள்
வேஷங்கள் எல்லாம்-என்
தேகம் எரியும் போதே
சாயம் வடியக் கண்டேன்!
கோடி முட்களால்
கோடு போட்ட
கோரம்!
என்
இரத்தம்,
இந்தத் துரோகியர்
கால்மிதி பட்டிடாமல்  தானோ,
ஆவியாகி
ஆகாயம் எய்தது?
என்
இளமை கொழுத்தப்பட,
இலக்கெலாம்
இதுவென ஆகிட.
திக்கெனப் பயணித்த
திக்கறியா இளமை எந்தன்!
புதைக்கப்பட்டது
என் எதிர்காலம்
புதிராகிப் போன
எவனோவொருவனின்
ஏகபோகம் நிலைப்பதற்க்காய்.
நான் ,
கஷியக் கஷிய
கல்லான ஆத்மர்கள்!
திருடிக்கொண்டனர் -என்
தியாகம் எனும்
திருப் பொருளை!
மனிதாபிமானப் போர்வையில்
மயக்கப்படும்,
மாணவர்
மந்தை!
மேய்க்கப்படுகிற
அடுத்த தலைமுறை!
மாற்றப்படுகின்ற நம்
தலையெழுத்துக்கள்!
நம்
பேனைகள் சூறையாடப்பட,
எம் கரங்கள் சலவைப்
பொறிக்குள்!
சலவை செய்தே
உலகை மறக்கச் செய்து,
சாறு கக்கியே
உழைக்கின்ற நாங்கள்!
காக்கைக்குக் கூட
நாங்கள் கேவலப்பட்டு!
காகிதம்
ஒட்டியும் ஊர்வலம்
கூட்டியும்
ஒடுங்கிப் போகின்ற எங்கள்
கூட்டம்!
நான்
ஒடுங்கியே போய்விட்டவனாய்...
உயிர்க்  குடித்தே
உதறித் தள்ளப்பட்டு!
என்,
உறவுகள் கண்ணீர்ச் சொட்டு,
உயிர்க் கக்கிய புகையோடிணைந்து!
உருகியே வழிகின்றது,
மறுபடி தொடரும்
உயிர்ப் பலிகள் நிலவுதல் கண்டு!
தீக்கு உணவாகிய,
நோக்கு பழிக்காதோ...

Monday 23 October 2017

Thank you Dinamani




வான வேடிக்கை: ஷஹி சாதிக்

By கவிதைமணி  |   Published on : 23rd October 2017 05:26 PM  |   அ+அ அ-   |  
அவள்
பார்க்கும் வேடிக்கைகள்
எனக்குள் பல வான வேடிக்கை
பாய்ச்சிய நாட்கள் அவை...
யாழின்
முன்றில்களில்
யாருமே கால் வைக்க
முயலா!
கும்மிருட்டு
தீபாவளிகளுக்குள்
குருட்டு
மின்மினி வேடிக்கை
காட்டிற்று!
விளக்கே இல்லாமல்
வேடிக்கை
பார்த்திருந்தோம்!
வெளிச்சம் எல்லாம்
கூரை பிய்த்துச் செல்லும் போது!
இராவனன் தேடும்
கனல்கள்?
இரவும் பகலும்!
தோட்டாவில் கழிந்தன இரவுகள்!
பட்டாசில் ஆசையை
தோற்கடித்த,
பஜனைகளில் பதறிக்கொண்டு!
யாழில்,
விளக்கேற்றும்
சிப்பாய்கள்,
விரும்பிப் பார்க்க
சிறு குழந்தை -அது
என்ன
சீன வித்தை?
சிவப்பு மட்டுமே
கண்ட கண்கள்!
சிலிர்த்துக் கொண்ட
மயிர்களுக்குள்
ஓசையால் மிரட்டிய
குண்டின் அதிர்வு!
தீபாவளிகள்
கசந்து போயின!
தீண்டிட இனிப்பு
கரிந்து போயின!
அவள்
யன்னல்
திறக்கும்
நாட்களும்
மறந்திட...
கன்னி வெடிக்குள்
கலைந்து போன கனவுகள்!
பனை பற்றிட,
பசுமை மறந்த யாழ்!
புகை மிதக்கின்ற
இராவன தேச வானில்...
ஆகாசமெல்லாம்...
முழுக்க அக்கினி!
ஆசையே அவிழ்ந்து போனது,
திரி கொழுத்தி
தீபம் ஏற்றும்!
வேட்டுக்கள் இட்ட கோலம்
சுவரெல்லாம் தீபக் கோலம்!
தோட்டாத் துழைத்த
எதிர்காலம்!
தொலைந்து போனவன்
அவளுக்குள்,
திரும்பி மீள முன்,
தொலைந்து விட்டாள்!
அவளைத் தேடி...
குடிலுக்குள்
சுருண்டு பதுங்கி!
அடைத்துக்கொண்ட
நெஞ்செல்லாம்
அதற்குள்!
நான்
யன்னல் திறக்க,
கவசமிட்டுத் தான்
மன்மதனே வந்து
சென்றான்!
இன்று ,
ஏற்றுகின்ற தீபம்
அன்று பெரு நெருப்பாய்!
இழந்து விட்ட
எல்லாமே விளக்கைக் கொண்டா
மீட்டுக்கொள்வேன்?
தோற்றுப் போன - என்
முதல்க் காதல்!
பார்வை பறித்த
அவள்
யன்னல்...
யாழில் தவிக்கிறது -என்
யாதுமறியா உள்ளம்!
அந்த,
விளக்கேற்றிய
அவள்
கரங்களும்-நான்
விரும்பிப் பார்த்த
வான வேடிக்கைகளும்...
மீண்டும் நாடும் மனது!
இங்கே,
யாழில் மிதக்கும்
ஆசைகளை முடிச்சில் கட்டி
யாசிக்கின்றவன்
தீபம் என
நான் நெருங்க,
தீப்பொரி கடித்துப் புண்ணானேன்!
தொடக்கமே இல்லா
ஓர்
கதையின்,
காத்திருக்கும்
கதா நாயகன்...
அவள் இன்று
தீபம் ஏற்றும்
திசை தேடி...
யாழ் மீட்டும்
யாசிக்கும் உள்ளம்...

Wednesday 18 October 2017

நிஷப்த வெளியில்

மிதப்பில் ஒருத்தி...

நிமேஷக் கிறுக்கல்களில்
பித்தனான ரோஜா முள்.
நிரந்தரமாகிக்கொண்ட
ரேகைகளின் சொந்தக்காரி.
இதழெல்லாம் தழும்பு!

தலைவிரிகோலமாக -அங்கே
பூ ஆரம்!
தவிப்பின் விடுபட
புன்னகைக்கும் போலி
ஆடி!

வாய்த்துவிட்ட,
நிரந்தரமில்லா அதிர்ஷ்டம்
வாடிட முன்னே...
மிதந்தாடிக்கொண்டு...

தனி வெளியில்.
தவம் இருக்கிறது
முனிவுற்றும்
முடிவுறாத் தேடல்,
கீறல்.



ஏதுமே
அறியாக்
காதுகள் கொண்ட
ஜபம்...

ஃ - என்னை
நிஷப்தம் குடிக்கிறது...

ஆழ்ந்துவிட்டேன்!
ஆழ்ந்துவிட்டேன்...

அங்கு,
இல்லாத மழையும்,
கொய்யாத அப்பிளும்
சொல்லாத ஆஷையும்
தள்ளாடும் ஓரிருதயமும்!

இங்கு...
எதற்கு இருதயம்?
மிதக்கிறேன்...

அந்தப்
பித்தனோ!
நிறுத்தாமல்
கிறுக்கிக்கொண்டே
நிஷப்தம் கலைக்கிறானோ?
முனைப் பேனை,
வெளியெல்லாம் குத்திய ஓட்டை!
மூலைமுடுக்குகள் அதற்கும் தான்
இருக்கும் போலும்..


சலனம் இல்லா
பித்தனின் பேனை முனை.
உலகம் எல்லாம்
நிஷப்த பாஷைக்குள்!

நான் ,
முள் முனை குத்தாமல்
நீள்
காற்றில் கை விரித்தவள்...

மை கக்காமல்,
முள் தடுப்பில்.
கை வைக்கக் காத்திருக்கும்
பித்தன்...

பின்தொடரும்-என்
 வேலி.
முட்களே!
வழி விடுங்கள்...

மிதக்கின்ற போதும்...
இரத்தம் கஷியா
மெளனத் தழும்பு!
நிஷப்தம் தடவிய வலிகள்!

இதழ் முழுக்க
முள்ளோட்டமானாலும்,
பனித்துளிக்கேனும் கலந்திடா
மெளனம்!
சிவப்பு மெளனம்!

இரேகை ஓடிய
வரலாற்றுப் பதிவுகள்
இடமறியா வரலாற்றுக் கிடங்கொண்றுள்.
கண்டுகொள்ளாமல்
மெளனிக்கும்
நான்.

சில நேரம்
முள்ளாகும்,
சில நேரம்
கவிஞனாகும்
உருமற்றப் பித்தன்.

பனித்துளியேனும்
துனிந்து துள்ளாமல்
பவித்திர நிஷப்தம்...


காத்திருக்கும் வெளிப்படுக்கை!
சலனம் என்பது
காரிகைத் தோற்றம்.

மெளனத்தின் எதிர்பார்ப்பு
ஒரு
மரணிக்கா சந்திப்பு...
சிறு
காத்திருப்பும் தோற்றுப்போக,
சிலிர்த்தாலும் இன்னும் கூட...

நிஷப்த வெளியில்
முள்ளுக்கு காகிதம்
நானாகி!


English Translation

In the silence space

The thorn of rose,became
Crazy by
Doodling for seconds.
I claim the ownership of
The permanent lines.
Scars ,
(Everywhere) on petals!

An unkempt wreath
Of flowers there!
A fake mirror ,
Struggling to
Overcome the Incapacitation

Inclusive of The fleeting luck ,
Before
Its death...
(I) float on...

Alone
Sits in a silence space,
Even the wisdom embrace
Still
The searching is endless...
Drawing./doodling.

Mumble of ignoramus Ears ...

Ah- the silence drinks me...

Deepen,
I become!
Yes to the deep...

There,
Devoid of Shower of rain,
And
Unplucked apple,
Also an
Untold desire,
With a struggling heart!

Here,
Why a heart ?
(I am)Flying...


But He,
The crazy
Doodler to
Is he drawing to
Break the Silence?
The pen point,
 hole of its tip everywhere in the space!
It also might have,
Pits and corners ...

Tuesday 10 October 2017

காந்திக்கு ஒரு கடிதம்: ஷஹீ ஸாதிக்

By கவிதைமணி  |   Published on : 09th October 2017 03:47 PM  |   அ+அ அ-   |  
நாங்கள்,
தொலைத்து விட்ட
உன் நிழல் காலம்
நோக்கி...

  நீ
சிலையாகி விட்டாய்;
நாங்களோ,
சின்னாபின்னமாகிவிட்டோம்!

வெண் புறாக்களை
வெறுமனே போஸ்டர்களில்
பதித்து வைத்து,
சிறகையும் கட்டிப்போட்டு
சுதந்திரம் பேசுகிறோம்!

வெய்யிலில் 
வெந்து வாடி
நொந்து கரிகிறது 
வெண்புறா!

நீ
பார்த்திருக்கிறாய்!
நாங்கள்
பதுங்கிக்கொண்டு தான்
பார்க்கிறோம்!

எங்குமே,
வாடை அழுத்த
அரசியல்,
கட்சிக்கூண்டுகளில்
கைதி போல் குந்திக்கொண்டு!

நீ,
நட்டு வைத்த மரங்களின்
நிழல்கள் கூட திருடப்படுவது
நிதர்சனமாகிக்கொண்டு...

ஊண்று கோலும்
கூட 
ஊழல் பூச்சிட்ட பின் தான்
ஊண்ர வேண்டி இருக்கிறது!

நீ,
நடந்த பாதையெல்லாம்
கடத்தப்பட்டன...
அடர்ந்த அவலத்தோடு
புதைக்கப்பட்டன!
தாரும் மண்ணும் 
நசுக்கிக்கொண்டு...

தீண்டாத மனிதரெல்லாம்
கூண்டோடு குவிக்கப்பட்டனர்!
தீயாலும் துரத்தப்பட்டனர்!
மாண்டோரிலும் நுழைக்கப்பட்டனர்!
கை நீட்டி ஆணையிடும் 
கயவரெல்லாம்,
ஆசனம் பெற்றனர்!

வேட்டுக்கள்
இன்னும் 
செயல் 
இழக்கவே இல்லை!

உன்
நெஞ்சு துழைத்த
தோட்டா முதல்...
நீத்துப் போன
அகிம்சை மூச்சு!

இருட்டடிப்பு
இத்யாதி...
பாதாளம்
வேதாளம் ரகம்.

நீ,
கொடுத்த வெள்ளை 
சால்வை,
உடுக்கும் போதே 
உருவப்படுவதேன்?

உயிரை 
உரித்தெரிக்கின்றவர்
பெயர்தான் இன்று
தலைக் கவசத்தோடு 
தலைமையில் நிற்கிறது!

பண்பாடுகள்,
உடன்பாடில்லாத
புண்படுத்தலால்
உடல் மடிகின்றன!

இருட்டடிப்பும்,
பாதாள இருட்டறைகளும்!
சாணமடிக்கிறது
பார்வைகளுக்குள்
சாகவும் வாழ்வும் 
ஒரே கலாச்சாரம் இங்கு!

மீண்டும் வந்து
மிலேனியம் விதைத்துச் 
செல்லும் 
காந்தி தேடும் 
காலம் கொண்டோம்...

சிலைக்கு மட்டும்
மழை பெய்கிறது இன்று!

Monday 2 October 2017

புதிய ஓட்டம்: ஷஹி ஸாதிக்

By கவிதைமணி  |   Published on : 01st October 2017 03:16 PM  |   அ+அ அ-   |  
ஒரு இதயம் முளைக்கிறது,
அதனுள் கனவு பிறக்கிறது
புது ஓட்டம் எடுக்கிறது!
மனம் பறக்கத் துடிக்கிறது...

கனவு,
சிறு துகளாய் மிதக்கிறது,
அணு பரவி அதிர்க்கிறது!

மனம்
முழுக்க பார்வைகளே!
இனம் அறியாத் தேடல் கொண்டு..

தினம் ,
உஷ்ணம் அடைக்கின்றது.
நிறம்
வெளிர்கின்றது...
நாளம் நாடிக்குள்!

புது ஓட்ட ஆரம்பம்!
ஓயாத
புல்லரிப்பு உள்ளங்கை
உறுத்தல்!

சாயும் சந்திரன்?
தேயும் சூரியன்,
ஏதும் ஆகலாம்
தேடும் பாதையில்...
தீண்டும்  வானவில்
ஓட்டை வீழலாம்
தாண்டி பாயும்
தீரா தாகம்!

கொதித்துக்கொண்டே
கொப்புளிக்கும்
கனவுகள் பற்றிக்கொள்ள!

ஓடுகிற ,
மேகம்
ஓயாமல்
தேடுகிறது புது
வானம்...

மேகமென்ன
கரைந்தாலும்,
கரைந்திடா ஆகாச வஸ்து!
ஆகிப்போன திட வளர்ச்சி...

என்
ஓட்ட நரம்பு
விரிந்தே சென்றிட...
வானமெல்லாம்
வேர்விட்டு பரவிட
ஓடிக்கொண்ட பயணம்
இன்னும்
பாதி வழியில் தரித்துக்கொண்டு...

வின் நோக்கி
எழும்
கல்லடி எண்ணிக்கொண்டு...
என்னைத் தொடவே இல்லை,
என்னில் சிதைவும் இல்லை!